தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

வெள்ளிக்கிழமை

அநுவாத நூன்மாலை

சனாதன இந்து தர்மம் இறங்குமுகமாக இருக்குங் காலத்தில், அதை மீண்டும் அதற்குரிய உயரிய நிலையில் ஸ்தாபிக்க ஆசாரிய ஸ்ரீசங்கரர் அவதரித்தார். அவர் வாழ்ந்த 32 வருட குறுகிய காலத்தில் சனாதன வைதிக தர்மத்தையும் அத்வைதத்தையும் மீண்டும் நிலைநாட்டியதுடன் ஜைனம், புத்தம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மதவாதிகளையும் வாதத்தில் வென்றார். போற்றற்குரிய ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீநரசிம்மர், ஜகன்னாதர் போன்ற தெய்வங்களையும் எழில்மிகு துதிகளால் போற்றியுள்ளார். ஆஸேது ஹிமாசலம்வரை உள்ள புண்ய பாரத பூமியைத் தனது பல பாதயாத்திரைகளால் இணைத்து ஒன்றாக்கியதுடன் பாரதத்தின் 4 மூலைகளில் ஸ்ரீமடங்களை ஏற்படுத்தினார். சந்நியாச தர்மத்தை முறைப்படுத்தி நிலைநாட்டியதுடன் அர்ச்சகப் பரம்பரையையும் ஆரம்பித்து வைத்தார். மிகவும் உயரிய அற்புதமான அத்வைத க்ரந்தங்களை இயற்றியதுடன் ஒவ்வொரு உயிரினுள்ளும் எங்கும் விண்ணெனப் பரவியுள்ள ஆத்மாவின் இருப்பை ஊர்ஜிதம் செய்தார்.

அதற்குப் பிறகு வெகுகாலத்திற்குப் பின்வந்த ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசங்கள் ஆதிசங்கரரின் போதனைகளையே பிரதிபலித்து அவற்றை விரிவாக்கின. ஸ்ரீபகவான் அவ்வப்பொழுது ஸ்ரீசங்கரரின் நூல்களைத் தாமாகவே முன்வந்தோ அல்லது அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கியோ மொழிபெயர்த்ததுடன் ஆன்மாவாய் என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும் அச் சங்கரனன்றி மற்றார்? எனவும் கூறியுள்ளார்.

தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்:

பிரம்மா தனது மானசீக புத்ரர்களான ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், ஸனத்ஸுஜாதர் முதலியோரை ஜகத் ஸ்ருஷ்டியாதி காரியங்களுக்காகத் தோற்றுவிக்கினும் அதில் விரக்தியுற்றவர்களாய் தமக்கு உபசாந்தி அளிப்பாரைத் தேடிவந்தனர். அத்தகைய அதிதீவிர பக்குவர்களுக்கு உதவ பரமகாருண்ய வடிவான ஈசனும் தக்ஷிணாமூர்த்தியாய் ஆலின்கீழ் மௌனமாய்த் தன்னிலையில் சின்முத்ரையுடன் இருக்க, அதைக்கண்ட ஸனகாதியர் காந்தத்தினால் கவரப்பட்ட இரும்புபோல் ஆகி அவரருகில் சென்று அவ்வாறே தம் உண்மை நிலையில் அமர்ந்தனர். அதிதீவிர பக்குவிகளும் இத்தன்னிலையின் உண்மையை அறியவல்லார் அல்லர். உலகமும் காண்பானும், உலகத்தைக் காட்டும் ஒளியும் அதற்குத் தடையாக இருப்பவை. ஆனால் இம்மூன்றையும் விரித்து பின்னர் தன்னுள் ஒடுக்கும் சக்தி தன்னை, ஆன்மாவை அன்றி வேறன்று என்ற இந்த சர்வாத்ம தத்துவத்தை ஸ்ரீசங்கரர் இத்தோத்திரத்தில் விளக்கியுள்ளார்.

ஆன்மபோதம்:

1948இல் மின்ன நூருதின் என்ற முஸ்லிம் பண்டிதர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தைத் தமிழில் பாக்களாக மொழிபெயர்த்து, ஸ்ரீபகவானுக்கு ஒரு பிரதியை அனுப்பியிருந்தார். ஸ்ரீபகவான் அதைப் படிப்பதும் கீழே வைப்பதும் திரும்பவும் திறந்து புரட்டுவதும் வைப்பதுமாக இருந்தார். அவர் முகத்தில் உள்ளிருந்து புறப்படும் ஓர் உந்துதலை அடியவர்களால் தெளிவாக உணர முடிந்தது. பின்னர் பகவான் வெங்கடரத்னம் என்ற தொண்டரைக் கூப்பிட்டு ஆச்ரம நூலகத்திலிருந்து ஆதிசங்கரரின் வடமொழி ஆன்ம போதத்தைக் கொண்டு வருமாறு கூறினார். அதைப் புரட்டிப் பார்த்த பகவான் இரு வெண்பாக்களை தமிழில் எழுதிப் பின்னர் அதை ஜி.வி. சுப்பரமாய்யாவிடம் காட்ட, அவர் மற்ற பாடல்களையும் எழுதும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் பகவான், அதெல்லாம் எதற்கு? என விட்டுவிட்டார். ஆனால் இருநாட்களில் மேலும் சில பாடல்கள் எழுதி, இது எதற்கு என்று சும்மாயிருந்தாலும் நம்மை விடாதுபோல் இருக்கிறது; ஒன்றன்பின் ஒன்றாக எதிரே வந்து நிற்கிறது எனக் கூறியதுடன் அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே 68 பாடல்களையும் தமிழ் வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

குருஸ்துதி:

ஆதிசங்கரர் திக்விஜயம் செய்கையில் மற்ற மதங்களைச் சார்ந்த வல்லுநர்களுடன் வாதம் செய்து அவர்களை வென்று பின் வடதிசையிலுள்ள மாஹிஷ்மதி நகரத்திற்குச் சென்றார். அங்கு வசித்த மண்டனமிச்ரர் என்னும் கர்மகாண்டப் பிரவர்த்தருடன் வாதம் செய்து அவரை வென்றதும், அவரது மனைவி தன்னையும் சங்கரர் வாதத்தில் வென்றாலன்றி அவரது வெற்றி பூரணமாகாது எனக்கூற சங்கரரும் வாதம் செய்தார். பல்வேறு விஷயங்களைப் பற்றிய எல்லா வாதங்களிலும் தோற்ற பாரதி என்ற மண்டனமிச்ரரின் மனைவி, காமசாஸ்திரத்தில் வாதிக்க ஸ்ரீசங்கரர் வாதத்தை மீண்டும் துவக்க ஒருமாத கால அவகாசம் கேட்டார். பின் தன் சரீரத்தை ஓர் மலைக்குகையில் தன் சீடர் காவலில் வைத்து, மரித்த அமருகன் என்ற அரசனுடல் புகுந்து, அவ்வரசனது மனைவியர் நூறுபேருடன் காமபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கையில், குரு கூறிப் போந்த காலம் கடந்து விட்டதால் கவலையுற்றுச் சில சீடர், பாடகர் வேடம் தரித்து அவ்வரசர் முன்நின்று இத்தோத்திரத்தினால் துதித்தனர். இதனைக் கேட்டவுடன் சங்கரரும் அரசனின் உடலை விட்டு நீங்கித் தம்முடல் புகுந்து வாதத்தில் பாரதியை வென்று கணவன் மனைவி இருவரையும் தமது சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு திக்விஜயத்தைத் தொடர்ந்தார்.

அத்தாமலகம்:

ஸ்ரீசங்கரர் மேற்குக் கடலோரமாகச் செல்கையில், பிற சித்தாந்தத்தைத் தழுவியவர்களை வாதத்தில் வென்றுகொண்டே ஸ்ரீவலி என்னும் கிராமம் வந்தடைந்தார். அவரது வரவை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற பிராமணர், தனது 13 வயதுச் சிறுவனுடன் அவரைக் காணச் சென்றார். அவரது சந்நிதியில் தானும் நமஸ்கரித்து தனயனையும் நமஸ்கரிக்கச் செய்தார். பின் தன் மகன் எவ்வாறு சிறுவயது முதல் மூகனாய், ஒன்றிலும் ப்ரவிருத்தியற்று, விருப்பு-வெறுப்பு, மான-அவமானம் முதலியவை சற்றும் இன்றி, அவன் வயதினை ஒத்த பாலர்களின் இயற்கைக்கு மாறாக இருப்பதையும் கூறினார். ஜகத்குரு ஸ்ரீசங்கரர், அப்பாலனது நிலையையுணர்ந்து கரங்களால் அவனைத் தூக்கி மிகவும் மகிழ்ந்து வினவலாயினர். இக்கேள்விகளே இத்துதியின் தொடக்கம். அப்பாலன் அளித்த பதில்களே தொடரும் பாக்கள்.

அப்பாலனது உன்னதமான விடைகளைக் கேட்ட தந்தை வியப்பால் வாயடைத்து நிற்க ஆசார்யர் அவரிடம், இப்பாலகன் உமக்கு மகனானது உமது பாக்கியமே. தவம் முடிவுறாமையால் பிறந்த இப்பாலகனால் உமக்கு ஒரு பயனுமில்லை. நம்பால் இருக்கட்டும் எனக்கூறி பாலனை உடன் இட்டுச் சென்றார்.

பின்னர் சீடர்கள் இச்சிறுவன் சிரவணம் போன்ற சாதனங்கள் ஏதுமின்றி இப் பிரம்ம நிட்டை அடையக் காரணமென்ன என்று வினவினர். சங்கரர், இவன் தாய் யமுனை தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த சகல சக்திகள் கொண்ட ஓர் சித்த யோகியிடம் தன் இருவயதுக் குழந்தையை விட்டுவிட்டு, மற்றைய பெண்களுடன் யமுனையில் நீராடச் செல்கையில், சிசு மெல்ல நடந்து நதியில் வீழ்ந்திறக்க, துக்கத்தை ஆற்றவியலாத தாயைத் தேற்றக் கருணை மிகுதியால் அந்தச் சாது தம் உடலைவிட்டு அச்சிசுவின் உடலில் புக அதனாலேயே இப்பெரும் பேறு பெற்றனன் என்று கூறினார்.

Back