உபதேச நூன்மாலையும்
அநுவாத நூன்மாலையும்
ஏகான்ம விவேகம்:
1947 ஆம் ஆண்டு ஒருநாள் திருச்சுழி வெண்பா அந்தாதி என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்ரீ பகவான் நான் மலைமேல் இருந்தபோது நாயனாவிடம் வெண்பா லக்ஷணத்தைச் சொல்லி வடமொழியிலோ, தெலுங்கிலோ வெண்பா எழுதும்படி கூறினேன். நாயனா, நரசிங்கராவ் ஆகியோர் பலமுறை முயன்றும் பலனில்லை என்று சூரிநாகம்மாவிடம் கூறினார். நாயனாவே இந்த வெண்பா (சுக்ல சந்தஸ்) முறையில் பாடல் இயற்ற முடியவில்லை என்றால் ஸ்ரீ பகவான்தான் தெலுங்கில் எழுத வேண்டும் என்றார் சூரி நாகம்மா. மூன்று நாட்களுக்குப் பிறகு
ஸ்ரீ பகவான் சிறு காகிதத் துண்டுகளில் நாகம்மாவிடம் கொடுத்துத் தான் தெலுங்கிலும் பின்னர் தமிழிலும் எழுதிய வெண்பா சுலோகங்களைக் காட்டினார். நாகம்மாவும் முருகனாரும் ஸ்ரீ பகவானிடம் மேலும் சில வெண்பாக்களை தெலுங்கில் இயற்றினால் அந்த பாஷைக்கும் ஒரு புதிய சந்தஸ் கிடைத்த பெருமை உண்டாகும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
மறுநாள் ஸ்ரீ பகவான் மேலும் இரண்டு வெண்பாக்களை இயற்றி, ஆத்ம பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதிசங்கரரின் பாடல் முன்பே ஒன்று உள்ளதால், இதற்கு ஏகாத்ம பஞ்சகம் என்று பெயரிடலாம் எனக் கூறியதுடன் இதைச் சங்கராபரண ராகத்தில் சீர்வரிசைகளுக்குத் தக்க நிறுத்திப்பாட வேண்டும் என்றும் விரிவாகக் கூறியருளினார்.
ஸ்ரீ பகவான் இதனைத் தமிழில் இயற்றியதும் முருகனார் அதற்கு ஒரு முடிவுரைப் பாடல் இயற்றினார். இதனையும் ஸ்ரீ பகவான் தெலுங்கில் மொழிபெயர்த்தும் பின்னர் கலிவெண்பாவாக அமைத்தும் மற்றும் மலையாள மொழியிலும் இதனை மொழிபெயர்த்து அருளினார். ஏகாத்ம பஞ்சகம்; ஏகாத்ம விவேகம்; ஏகாத்ம தத்வம் என்று வழங்கப்படும் இதுவே
ஸ்ரீ பகவானால் இயற்றப்பட்ட மூலக் கிரந்தங்களில் கடைசியாகும்.
அப்பளப்பாட்டு:
அன்னை அழகம்மை மலைமேல் சமைக்க ஆரம்பித்த காலங்களில், ஒருநாள் பகவானுக்கு இரட்டை அப்பளம் பிடிக்குமே, அதைச் செய்யலாமே என்றெண்ணினார். பகவானுக்குத் தெரியாமல் ரகசியமாக ஊருக்குள் சென்று எச்சம்மாள், முதலியார் பாட்டி இவர்களிடமிருந்து அப்பளம் செய்வதற்குத் தேவையான சாமான்களைச் சேகரித்துக் கொண்டு வந்தார்.
அவர் எங்குப் போகிறார் என்பதை மரத்தடியிலிருந்து ஸ்ரீ பகவான் பார்த்துக் கொண்டே இருந்தார். டவுனுக்குச் சென்ற அழகம்மை தயாராகவிருந்த, அப்பளமிடுவதற்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு விரூபாக்ஷ குகைக்கு வந்து அவற்றைப் பத்திரமாக வைத்துவிட்டார். ஸ்ரீ பகவான் ஒன்றும் தெரியாதவர் போலிருந்துவிட்டார்.
தரிசனத்திற்கு வந்தவர்களெல்லோரும் சென்ற பிறகு ஸ்ரீ பகவான் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டார். சாவகாசமாக அம்மா எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு அப்பளம் இடுவதற்குத் தயாரானார். சுமார் இருநூறு முன்னூறு உருண்டைகள் இருந்தன. தனியாக அவ்வளவையும் அப்பளமாக்க முடியாது. ஸ்ரீபகவானுக்கு அப்பளமிடத் தெரியும் என்பது அழகம்மைக்கும் தெரியும். ஆகையால் மெதுவாக ஸ்ரீ பகவானிடம் அப்பளம் இடுவதற்கு ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று ஸ்ரீபகவான் அம்மாவைப் பார்த்து, நீ எல்லாவற்றையும் விட்டுவிட்டாயல்லவா! கிடைத்ததைச் சாப்பிட்டுச் சும்மா கிடக்காமல் இவையெல்லாம் எதற்கு! நான் அப்பளம் செய்ய வரமாட்டேன். நீ செய்தாலும் சாப்பிட மாட்டேன். எல்லாவற்றையும் நீயே செய்து சாப்பிடு என்று சொல்லிச் சும்மாயிருந்து விட்டார்.
அன்னையும் சிறிது நேரம் சும்மாயிருப்பதும், திரும்பவும் கூப்பிடுவதுமாயிருந்தார். அம்மா தன்னை விடமாட்டார் என்று தோன்றியது ஸ்ரீபகவானுக்கு. சரி, அப்படியானால் நீ இந்த அப்பளம் செய். நான் வேறு ஒரு அப்பளம் செய்கிறே னென்று, மேற்கண்ட அற்புதமான ஞானப் பொக்கிஷமாகிய அப்பளப்பாட்டை அன்னையை முகாந்திரமாக்கி நம் அனைவருக்கும் ஸ்ரீ பகவான் பாடியருளினார்.
பகவான் பின்னாளில் இதைப்பற்றிக் கூறும்போது, அன்னை சாதப்பாட்டு, குழம்புப் பாட்டு என வேதாந்தபரமான பாடல்களை எப்பொழுதும் பாடிக்கொண்டே வேலை செய்வது வழக்கம். அப்பளப்பாட்டு என ஒருவரும் இதுவரை எழுதியதில்லை. எனவேதான் இதை எழுதவேண்டுமெனத் தோன்றியது. பாடுவது அன்னைக்கு மிகவும் பிடிக்கும். இதையும் கற்றுப் பாடட்டுமே என்றுதான் இயற்றினேன். அவள் அப்பளம் செய்து முடிக்கையில் எனது அப்பளப்பாட்டும் தயாராகிவிட்டது. நான் இதை (அப்பளப்பாட்டை) புஜிக்கிறேன். நீ தயாரித்த அப்பளத்தை நீ சாப்பிடு என்று கூறினேன் என்றார்.
ஆன்மவித்தை:
ஒருநாள் அடியவர் ஒருவர் ஸ்ரீபகவானிடம், ஆன்மவித்தை எப்படிச் சுலபமாகும்? முக்தி அவ்வளவு சுலபமா? ஆனால் ஐயே! அதிசுலபம் ஆன்மவித்தை என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்டார். உடனடியாக ஸ்ரீபகவான், எனக்கெப்படித் தெரியும்? என்று முருகனாரைச் சுட்டிக்காட்டி அவரல்லவோ எழுதினார்? அவரைத்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். தமிழ் இலக்கியத்தில் பிரசித்தி பெற்ற இசைநாடக ஆசிரியர் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் மக்களின் மனதைக் கவர்ந்ததொன்று. அதில் ஒரு பாடல் ஐயே! மெத்தக் கடினம்; உமதடிமை ஐயே! மெத்தக் கடினம் என்பது. ஸ்ரீமுருகனார் இதைத்தழுவி, ஐயே! அதிசுலபம் ஆன்மவித்தை ஐயே அதிசுலபம் என்ற பல்லவியையும், அனுபல்லவியையும் எழுதி அதன்மேல் அவரால் அதைத் தொடர்ந்தெழுத முடியாத காரணத்தால் சரணங்கள் எழுதி பூர்த்தி செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளுடன் ஸ்ரீபகவானிடம் சமர்ப்பித்தார். இது 1927இல் நடந்தது. முதலில் பகவான் ஒரு சரணமெழுதி முடித்தவுடன் முருகனார் குறைந்தது 4 சரணங்களாவது வேண்டுமென விழைய பகவான் மேலும் 3 எழுதி முடித்துப் பாடலைப் பூர்த்தி செய்தார். ஆனால் நந்தனார் பாட்டில் கடைசி சரணத்தில் பொன்னம்பலத்தைக் குறிப்பிட்டுக் கூறியிருப்பதுபோல் அண்ணாமலையைக் கூறாமல் விட்டதை நினைவுகூர்ந்து கடைசி சரணத்தையும் எழுதியதாக ஸ்ரீபகவானே விவரித்துள்ளார்.
தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்:
ஸ்ரீதேவிக்கு உபதேசிக்கப்பட்ட இந்தப் பரவித்தையானது காலத்தைக் கடந்த ஞானத்தைப் பொருளாகக் கொண்டது. அனாதிகாலம் முதலே இந்து சமய பாரம்பரியத்தில் வேதத்திற்குச் சமமான பிரமாண முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெய்வ வாக்குகளாகவும் கருதப்படுபவை. 28 ஆகம சாஸ்திரங்கள், அவற்றில் ஒரு உப ஆகமமான ஸ்ரீதேவிகாலோத்தரம் 24000 பாக்களைக் கொண்டது. ஸ்ரீபகவானால் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கருளப்பட்ட 85 பாடல்களும் ஞானகாண்டத்தில் 65வது அத்தியாயத்தில் உள்ளவை. ஞானமார்க்கத்தை விரிவாக அறைதலுடன் அதனை ஆசிரயித்தவன் அனுசரித்தற்குரிய அத்வைதபரமான ஆசாரங்களைக் கூறி சாதகர்களை ஊக்குவிக்கும் உபதேசங்களையும் அருளுகிறது.
ஸ்ரீ பகவான் மலைமீது விரூபாக்ஷ குகையிலிருந்த காலத்தில், அன்பர் ஒருவர் கிரந்தாக்ஷர ஸம்ஸ்க்ருத ஆகம நூலின் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து ஸ்ரீபகவானிடம் காட்டினார்.
அதைப் புரட்டிப் பார்த்த ஸ்ரீபகவான், கிரியைகளையும் சரியைகளையும் பற்றி விஸ்தாரமாகக் கூறும் ஆகமங்களுக்குள், அதிலும் உப ஆகமங்களுக்குள், பூரண அத்துவித ஞானத்தைப் போதிக்கும் தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம், சர்வ ஞானோத்தர ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் இரண்டிலும் நிர்விகார பரப்பிரம்மத்தைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
இந்த இரண்டு பிரகரணங்களும் ஈசனால், தேவிக்கு உபதேசிக்கப் பட்டதொன்றும்; குகனுக்கு உபதேசிக்கப்பட்டதொன்றுமாகும். இவை இரண்டும் தமது அனுபூதியை ஒட்டியேயிருப்பதைக் கண்டு, இவற்றை ஒரு புத்தகத்தில், நாகராக்ஷரத்தில் அழகாக அச்சுப்போல் எழுதிவைத்துக் கொண்டார்.
விரூபாக்ஷ குகையிலிருக்கும் போதே 85 சுலோகங்கள் கொண்ட, தேவிகாலோத்தர ஞானாசார விசார படலத்தை, சுலோகத்திற்கொரு வெண்பாவாக தமிழில் மொழி பெயர்த்து அருளினார். அது அக்காலத்திலேயே அன்பர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ஸ்ரீபகவான் கீழ்வரும் அவதாரிகையை இதற்கு அருளி யுள்ளார்:
உபாகமங்களு ளொன்றாய ஸ்ரீ தேவிகாலோத்தரத்தின் கண் சகலாகம சாரத்தின் சாரமாய்ப் பக்குவான்மாக்கள் பரிபாக காலாநந்தர மடையத்தகுந்த ஞானத்தையும் ஆசாரத்தையும் விவரித்துப் பரமசிவன் பரமசிவைக் கருளிச்செய்த இந்த ஞானாசார விசார படலக் கிரந்தமானது, சனன மரண ரூப சம்சார துக்க சமுத்திரத்தில் வீழ்ந்து முங்கிப் பொங்கித் தத்தளிக்குஞ் சீவர்களைத் தாங்கி நேர்வழி கொடுபோய் முத்தியெனு மக்கரையிற் சேர்க்கும் அரும் பெருந் தோணியாயிருத்தலின், முமுட்சுக்க ளனைவருந் திகைத்து வழிதப்பி யலையாம லிதன் றுணையால் நேர்மார்க்கமே சென்று அச்சாந்தானந்த பரமபத மடைவாராக.