தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

செவ்வாய்க்கிழமை

உபதேச நூன்மாலை

உபதேச உந்தியார்:
ஸ்ரீபகவானே எல்லா தெய்வ அவதாரங்களாகவும் பரிணமித்தார் என்ற தமது திண்ணிய கருத்தினை முருகனார் ஸ்ரீ ரமண சந்நிதி முறையில் சில பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமது திருஉந்தியாரில் சிவபுராணத்தில் வரும் பூர்வ மீமாம்ச காண்டிகளான ரிஷிகளின் சரிதையைச் சொல்லலுற்றார். அந்தத் தபஸ்விகள் அற்புத சக்திகளைப் பெற விரும்பி கர்மங்களை யன்றிக் கடவுள் இல்லை என நம்பி அவற்றையே அனுசரித்த வண்ணமிருந்தனர். அவ்வமயம் பரமேச்வரனாகிய சிவபெருமான் அவர்களிடையே அழகிய பிக்ஷாடனராகத் தோன்ற, ஸ்ரீமஹாவிஷ்ணு அனைவரையும் மயக்கும் மோஹினி ரூபத்தில் அவரைத் தொடர்ந்தார். மோஹினியின் லாவண்யத்தில் மயங்கிய தாருகாவன ரிஷிகள் தங்களது கர்மங்களை மறந்தனர். ரிஷி பத்தினிகளோ அந்த அழகிய பிக்ஷாடனர் வடிவில் வந்த மயக்கும் இளைஞனைக் கண்டு மோஹம் கொண்டு தத்தம் பதிகளைத் துறந்து கடமைகளையும் மறந்து சாதுவின் பின்சென்றனர். அதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட முனிவர்கள் தமது அற்புத சக்திகளின் துணைகொண்டு அபிசார ஹோமம் செய்து ஹோம குண்டத்திலிருந்து அச்சாதுவை மாய்க்கும் பொருட்டு ஓர் மதங்கொண்ட யானையையும் ஓர் கோரப் புலியையும் உண்டாக்கி அவற்றை அவர்கள் இருவர் மீதும் ஏவினர். ஈசன் அப்புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து யானையைக் கொன்று அதன் உரியைப் போர்த்திக் கொண்டார். தாருகாவன ரிஷிகள் தம் தவறை உணர்ந்து ஈசனிடம் பொறுத்தருள வேண்டி மன்றாடினர்.

இதுவரை இச்சரிதையை இயற்றிய முருகனார் அன்று தாருகாவன ரிஷிகளுக்கு உபதேசமருளிய அச்சிவனே இன்று ரமணனாக அவதரித்துள்ளதால் ஸ்ரீபகவானே அவ்வுபதேசத்தை அறைய வல்லவர் எனத் திடமாக நம்பி பகவானை அதனை அருளுமாறு வேண்ட, ஸ்ரீபகவானும் மூன்று வரிகளைக் கொண்ட உந்தியார் பாவினத்தில் உந்தீபற (மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு) ஒவ்வொரு பாவின் முடிவிலும் வருமாறு அமைத்து முதல் 15 பாக்களில் தொன்றுதொட்டு வழக்கிலிருந்து வரும் கர்மம், பக்தி, யோகம் ஆகிய மார்க்கங்களையும் அவற்றை அனுசரிக்கும் முறைகளை விளக்கியும் அடுத்து வரும் 15 பாக்களில் ஆன்ம சாக்ஷாத்காரம் அடையும் மார்க்கத்தை விளக்கி நான் யார்? விசாரமே முடிவான பயனை அளிக்கவல்ல ஒரே சாதனம் என்றும் தெளிவுபட இசைத்துள்ளார்.

பின்னர் யோகி ராமையாவின் வேண்டுகோட்கேற்ப தெலுங்கில் இதனை அனுபூதி சாரம் என்ற தலைப்பிலும் குஞ்சு சுவாமியின் இரங்கலுக்கு இணங்கி மலையாளத்திலும் கணபதி முனி விண்ணப்பித்தவாறு சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தருளினார். தமிழில் உபதேச உந்தியார் என அழைக்கப்பட்டாலும் உபதேச சாரம் என்ற சமஸ்கிருத தலைப்பிலேயே எல்லா மொழிகளிலும் இன்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீபகவான் உடல் தாங்கியிருந்த காலத்திலேயே அதிகாலை நடைபெறும் வேதபாராயணத்துடன் ஸம்ஸ்க்ருத உபதேச சாரமும் சேர்த்து இசைக்கப் பட்டது போலவே இன்றும் மாலையில் ஸ்ரீரமண சந்நிதியில் வேதபாராயணத்துடன் சேர்த்து இசைக்கப்பட்டு வருகின்றது.

உள்ளது நாற்பது & அனுபந்தம்:

ஸ்ரீபகவான் அவ்வப்போது தனது உபதேசங்களை உள்ளடக்கிப் புனைந்த தமிழ்ப் பாடல்கள் சுமார் 20 இருந்தமையால் மேலும் 20 பாடல்கள் இயற்றி பண்டைய தமிழ் இலக்கிய மரபிற்கொப்ப நாற்பது பாடல்கள் அருளிச் செய்யுமாறு ஸ்ரீபகவானை முருகனார் வேண்டினார். ஸ்ரீபகவானும் அதற்கிசைந்து பாடல்களை அருளினார். ஆனால் பாடல்கள் பாவினத்திலும் கருத்திலும் வேறுபட்டிருந்ததால் பலவற்றை நீக்க வேண்டி வந்தது. அதன்பொருட்டு ஸ்ரீபகவான் புதுப் பாடல்களைப் புனைய, முருகனார் ஒத்த கருத்திற்கும் பாவினத்திற்கும் ஏற்ப அவற்றை வரிசைப்படுத்தி வர உள்ளது நாற்பது உருவாயிற்று. இந்நாற்பதில் ஒரு பாடலை கணபதி முனி மங்கலச் செய்யுளாகத் தேர்வு செய்ய, அதனை ஈடு செய்ய ஸ்ரீபகவான் மேலும் ஒன்று புனைந்து நாற்பதாக ஆக்கியருளினார். வெவ்வேறு கருத்தினையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய நீக்கப்பட்ட பாடல்களை உள்ளது நாற்பது பிற்பகுதியாகத் தொகுக்கலாமெனத் தெரிவித்த முருகனாரது கருத்துக்கு ஸ்ரீபகவானும் சம்மதித்து புதிய பாடல்களை இயற்றினார். செய்யுட்களை ஆக்கியோன் என்பதில் சற்றும் நாட்டமற்று சத்தியத்தினை அடியவர்களுக்கு வெளிப்படுத்துவதிலேயே நாட்டமுற்ற ஸ்ரீபகவான் முதல்தர வடமொழி அத்வைத நூல்களிலிருந்தும் ஒத்த கருத்துடைய பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிமாற்றம் செய்தருளினார். இப்படியாக உள்ளது நாற்பது - அனுபந்தம் உருப்பெற்றது.

ஸ்ரீபகவான் எழுதியருளிய ஞான சாஸ்திரங்களிலேயே இந்த 80 பாடல்களும் அவரது உபதேசத்தை முற்றிலும் உள்ளடக்கி, உள்ளதைக் காட்டும் ஒளியெனச் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன. அநேக மொழிபெயர்ப்புகளையும் விளக்கவுரைகளையும் கண்டுள்ள இதனை ஸ்ரீபகவானே தெலுங்கில் உன்னதி நலுபதி என்ற தலைப்பில் உரைநடையிலும் மலையாளத்தில் ஸத்தர்சனம் என்னும் பெயரில் கிளிப்பாட்டாகவும் எழுதியுள்ளார்.


Back