தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

திங்கட்கிழமை

அருணகிரியின் விரூபாக்ஷ குகையில் ஸ்ரீபகவான் வசித்து வந்த காலத்திலேயே சுமார் 1914இல் ஸ்ரீ பகவானால் இயற்றப்பட்ட ஸ்துதிகளைச் சேர்ந்தவை ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம்.

அருணாசல மாஹாத்மியம்:

ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகத்திற்கு முன்னோடியாய் அமைந்துள்ள இச்சிறிய துதி, ஸ்ரீபகவானால் ஸ்காந்த புராணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவற்றுள் அருணாசல மகிமையை வலியுறுத்தும் முருகனாரால் இயற்றப்பட்ட பாடலும் அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை பௌர்ணமியன்று ஒளிரும் தீபதர்சனத்தின் தத்துவத்தை விளக்கும் பகவானால் இயற்றப்பட்ட பாடலும் அடங்கும்.

அக்ஷரமணமாலை:

தினந்தோறும் நகரினுள் சென்று பிக்ஷை எடுக்கும் சாதுக்கள் பலர் பகவானது அடியார்களாக இருந்த சமயம் அது. திருவருணையைச் சார்ந்த ஏனைய சாதுக்கள் மகரிஷியைச் சார்ந்த அடியார்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு பிக்ஷைபெற்றுச் செல்வோராயினர். மற்றையோரிடமிருந்து தம்மை மகரிஷியைச் சார்ந்தோராகப் பிரித்துக் காட்டுவதற்கும் பிக்ஷை இடுவோரின் ஆன்ம விளக்கத்திற்காகவும் பிக்ஷைக்குச் செல்கையில் இசைப்பதற்கு ஏதுவான பாடல் ஒன்றை இயற்றித் தரும்படி பகவானது அடியார்கள் விண்ணப்பிக்க, ஏற்கெனவே நாயன்மார்களது தேவாரம் பெருமளவில் இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார் பகவான்.
திருவருள் கைகூட, ஒருநாள் கிரிவலம் செய்யும்போது பகவான் ஆங்காங்கே அமர்ந்து, தனக்கும் அருணாசலனுக்கும் இடையே ஏகாந்தத்தில் நிகழ்ந்த அதிசயத்தை பக்திப் பரவசத்துடன், 108 மந்திரங்கள் அடங்கியதான இந்நூலை எழுதியருளினார். இதற்குப் பொருள் என்ன என்று
ஸ்ரீ பகவானிடம் கேட்டபோது அதற்குப் பொருள் அதைப் பாராயணம் செய்வதுதான் என்று கூறியருளியுள்ளார். எனவே அக்ஷரமணமாலைக்குச் சரியான விளக்கம் தருவது இயலாத காரியம். அவரவர் பக்திக்கு ஏற்ப, இப்பாடல்களின் பொருளை ஒருவாறு உள்ளுணர்வால் பெறமுடியும். தனது மற்ற உபதேசப் பாடல்களுக்கு பலமுறை விளக்கம் அருளிய பகவானிடம் அக்ஷரமணமாலைக்கும் விளக்கம் வேண்டியபோது, அவை சிந்தனை செய்து எழுதப்பட்டவை அல்ல, நீங்களே விளக்குங்கள் கேட்கலாம் என அருளியுள்ளார் என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாம்.

நவமணிமாலை:

பாடல் 1: பகவான் இந்தப் பாடலை எழுதியதற்குக் காரணமாக ஒரு ரசமான சம்பவம் நடந்தது. விரூபாக்ஷ குகையில் பகவான் இருந்த காலத்தில் சிதம்பரத்திலிருந்து தீக்ஷிதர் ஒருவர் பகவானுடைய மகிமையைக் கேள்வியுற்று தரிசனத்திற்காக வந்தார். பேச்சுக்கிடையில் பகவானைப் பார்த்து, ஸ்வாமி! பஞ்சபூத க்ஷேத்திரங்களில் ஆகாயலிங்கமே உயர்வானதல்லவா! தாங்கள் ஒருமுறை வந்து நடராஜ தரிசனம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொள்வார்.
இவ்வாறு அவர் ஒருமுறை கேட்டபொழுது பகவான் அசலனேயாயினும் என்ற பாடலை ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்தார். தீக்ஷிதர் நன்றாகப் படித்து விஷயம் தெரிந்தவர். பகவான் எழுதிக் கொடுத்த பாடலைப் படித்துப் புரிந்துகொண்டு, பிறகு அவர் பகவானைச் சிதம்பரத்திற்கு வரும்படி வற்புறுத்துவதை நிறுத்திக் கொண்டார். பிற்காலத்தில் இந்தப் பாடல் நவமணி மாலையில் முதல் பாடலாகச் சேர்க்கப்பட்டது. இதுபோல் பற்பல சந்தர்ப்பங்களில் பகவான் அருணாசலன்மீது இயற்றிய ஒன்பது தனிப்பாடல்களை ஒன்று சேர்த்து அத்தொகுப்பிற்கு நவமணி மாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
பாடல் 8: பகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்தில் ஈசுவர சுவாமிகள் பகவானுடன் இருந்தார். அவர் கவி பாடுவதில் சமர்த்தர்.
ஒரு சமயம் அவர், ஒட்டக்கூத்தர் எழுதிய பாடலில் சிங்களராஜன் தந்த சன்மானங்களைப் பற்றி சந்த விருத்தத்தில் பாடியிருப்பதைக் காட்டி ராஜாதிராஜனான அருணாசலேச்வரன் பகவானுக்கு என்னென்ன பரிசு கொடுத்தான் என்பதை, ஒட்டக்கூத்தர் பாடிய அதே சந்த விருத்தத்தில் பாடியருள வேண்டுமென்று பகவானை வேண்டினார்.
அப்பொழுது ஒட்டக்கூத்தர் இயற்றிய அதே சந்த விருத்தத்தில் பகவான் அருணாசலன் தன்பதம் எனக்குத் தந்தனன் என்று இயற்றிய பாடல்தான் இது. இதே சந்தத்தில் ஈசுவர சுவாமிகளும் ஒரு பாடலை இயற்றியிருக்கிறார்.

பதிகம், அஷ்டகம்:

பதிகம், அஷ்டகம் இவைகளைப் பற்றி ஸ்ரீபகவான் கூறியதாவது:
பிறரது தூண்டுதலின்றி தானாகவே உள்ளத்தில் ஸ்புரித்து என்னை வற்புறுத்தி எழுதத் தூண்டியவை பதிகமும் அஷ்டகமுமே. நான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்து (1916) கருணையால் என்ற சொல் மனதில் ஸ்புரித்துக் கொண்டே இருந்தது. இது எதற்கென்று அதைக் கவனியாது விட்டும் அந்த ஸ்புரணம் விடாமல் தொடரவே, அந்தச் சொல்லை வைத்து ஒரு விருத்தப் பாடலை (எழுசீர் விருத்தம்) எழுத, வார்த்தைகள் முயற்சியின்றியே தாரைபோல் ஊறி வரத் தொடங்கின. இதேபோன்று மறுநாள் முதல் முன்பாட்டின் கடைசி பதமானது முன்போலவே மனதில் திரும்பத் திரும்பத் தோன்றியது. அதை வைத்து இரண்டு, மூன்று என பத்து பாடல்கள் எழுதும்வரை நிகழ்ந்தது. இவ்வாறு அருணாசல பதிகம் உருப்பெற்றது. (பிறகு மேலும் ஒரு பாடல் சேர்க்கப்பெற்று ஏகாதசமாகியது). பத்தும் பதினொன்றும் ஆகிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒரே நாளில் இயற்றப்பட்டன.

பகவான் பதிகம் எழுதிய முறையை அறிந்த அய்யாசாமி என்பவர், பகவான் ஒருமுறை கிரிபிரதக்ஷிணத்திற்குப் புறப்படத் தயாரானபோது பழனிஸ்வாமியிடம் ஒரு காகிதமும் பென்சிலும் கொடுத்தார். அப்போது, பதிகத்தின் இறுதிப் பாடலின் இறுதிப் பதத்தின் தொடர்ச்சியாக, எண்சீர் விருத்தமாக அஷ்டகத்தில் ஆறு பாடல்கள் பகவானால் எழுதப்பெற்றன. நாராயண ரெட்டியார் என்பவர் அவற்றை அச்சுப் போட முன்வந்தபோது பகவான் அஷ்டகத்திற்குத் தேவையான மேலும் இரண்டு பாடல்களையும் எழுதி அவரிடம் கொடுத்தார். அவர் பதிகத்தையும், அஷ்டகத்தையும் அச்சிட்டு வெளியிட்டார்.

அருணாசல பஞ்சரத்னம்:

ஸ்ரீபகவானது அடியாரும் சமஸ்கிருத கவியுமான கணபதி முனி, 1917இல் தமிழ் வெண்பா இலக்கணத்தை அனுசரித்து சமஸ்கிருதத்தில் கவிதை எழுத முயன்றார். அது முடியாமல் போகவே, ஸ்ரீபகவானிடம் சென்று சமஸ்கிருதத்தில் ஆர்யாகீதி யின் இலக்கண முறைப்படி சில சுலோகங்கள் இயற்றித் தருமாறு வேண்டினார். வடமொழியே சரியாகத் தெரியாத தனக்கு பாவின் யாப்பிலக்கணம் சற்றும் தெரியாதென பகவான் மறுக்க, ஆர்யா கீதி விருத்தத்தின் யாப்பிலக்கணத்தை விவரமாக கணபதிமுனி, எடுத்துரைத்தார். பின்னர் ஸ்ரீபகவான் ஆர்யா கீதையின் யாப்பிலக்கணத்தை ஒட்டி வடமொழியில் ஐந்து சுலோகங்களை இயற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தைவரதன் என்ற பகவானது அடியார் இவற்றின் இறுதிப் பாடலாக ஒரு பாடலை இயற்ற 5 வருடங்கட்குப் பிறகு ஐயாசாமிப் பிள்ளை என்ற அன்பரின் இரங்கலுக்கிணங்கி ஸ்ரீபகவான் பஞ்சரத்னத்தின் ஐந்து பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த்ததுடன் தைவரதரின் பாடலையும், அருணகிரி ரமணன் என்ற பாடலாக மொழிபெயர்த்தருளினார்.
இதன் வடமொழி சுலோகங்கள் ஆச்ரமத்தில் பகவான் சந்நிதியில் தற்போது தினமும் காலை 6.45 மணிக்கு ஸ்ரீகணபதி முனியின் ஸ்ரீ ரமண சத்வாரிம்சத்துடன் இணைத்து பாடப்பெறுகின்றன.

முடிவில் உள்ள மங்கலப் பாடல்கள்:

அம்ருதநாத யதி என்ற மலையாளத் துறவி பகவான் விரூபாட்ச குகையில் தங்கியிருந்த நாட்களில் ஸ்ரீ ரமணன் யாரோ? எனக் கேட்டு மலையாள மொழியில் கவிதை ஒன்றைப் புனைந்து பகவானிடம் அளிக்க, பகவான் அவ்வினாவிற்கு விடை அளிக்கும்முகத்தான் புனைந்ததே அரியாதி எனத் துவங்கும் பாடலாகும்.

ஸ்ரீமுருகனாரால் புனையப்பட்ட வாழ்க வான் என்ற வாழ்த்துப் பாடல் திங்கட்கிழமை இறுதியிலும், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான பாராயணத்தின் இறுதியில், தற்போது சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயரின் பொன்னொளிர் பத்து என்பதில் வரும் வாழி வாழி ரமண மகாகுரு என்ற பாடலும் பாடப்பெறுகின்றன.

Back