தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

முன்னுரை

ஓர் ஞானியினால் அருளப்பெறும் ஓரோர் சொல்லும் ஒப்பற்ற வேதவாக்கே. ஆத்மானுபூதியையே பிரமாணமாய்க் கொண்டு வெளிவருவதால் அவ்வருண்மொழிகள் சத்தியத்திலும் மகிமையிலும் பிரமாணத்திலும் வேதத்திற்குச் சமமானவை என்பது தொன்றுதொட்டு வழக்கிலிருக்கும் ஓர் கருத்து. இளம்பிராயமான பதினாறு வயதினிலேயே முழுமையான முடிவை, முக்தியை அடையப்பெற்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் தாமாகவே அருளிச் செய்த பாடல்களும் அன்னாரது மொழிபெயர்ப்பில் மிளிரும் வடமொழிப் பாடல்களும் அக்கருத்தினைப் பறைசாற்றி மெய்ப்பிக்கின்றன. தனது ஆத்மசாக்ஷாத்காரத்தின் பரிணாமம் அனைத்தையும் குறுகிய பாவினங்களில் பூர்ணமாக அடக்கி வெளிக்கொணரும் அசாதாரண வல்லமை பிற்காலத்தில் ஸ்ரீபகவானிடத்தில் விசேஷமாகப் பரிணமித்தது. சக்தி வாய்ந்த மந்திரங்களை ஒக்கும் இப்பாடல்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு, செலுத்தப் பெறும் இலக்கு தவிரா அம்புகள்போல் ஒளிக்கணைகளென உள்ளங்களில் பாய்ந்து மனவாக்குக்கெட்டாத அதிமர்மப் பாங்கில் மனத்தை ஈர்த்துச் செல்லும் அருட்சக்தி வாய்ந்தவை. ஊன்றிப் படிப்போரின் உள்ளங்களில் தெளிவையும் ஞானத்தையும் புகட்டும் ஆற்றல் படைத்தவை.
பெரும்பாலும் மோனநிலையில் அமர்ந்து மௌன உபதேசமே அருளிய பகவான் எழுத்தில் வடித்தது சிறிதேயாயினும், வினவப்படும் வினாக்களுக்கு வார்த்தையாலோ எழுத்து வடிவிலோ விடையளிக்கத் தயங்கியதேயில்லை. சிரத்தையுடன் இதயபூர்வமாகக் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்திற்கும் விரிவான, தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தானே பாடல்களை இயற்றிச் சரிபார்த்ததுடன் சிற்சில சந்தர்ப்பங்களில் பிறரால் இயற்றப்பட்ட பாடல்களையும் நேர்த்தியாகத் திருத்தியதுமுண்டு. முறையாகப் பயிலாத தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் அவருக்கு இயல்பாகவே தேர்ச்சி அமைந்திருந்தது வியப்பே. ஸ்ரீ பகவான் இயற்றிய, மரபிலிருந்து சற்றும் பிறழாத ஸம்ஸ்கிருதப் பாடல்களின் இலக்கணத் துல்லியத்தை மட்டுமன்றி வடமொழிப் புலமையையும் அதன் அழகையும் கோர்வையையும் கண்டு வியக்காத பண்டிதர்களே இல்லை எனலாம். ஸ்ரீபகவானின் இனிய தமிழ்ப் பாக்களும், அவை தோன்றிய நாள்முதல் இன்றுவரை தமிழ் இலக்கிய வல்லுநர்களால் ஓர் இலக்கிய மேதையின் படைப்புகளெனப் போற்றி மதிக்கப் பெறுகின்றன. இப்பாடல்கள் வெளிவர ஏதுவாய் இருந்த சந்தர்ப்பங்கள், அன்று நேரில் கண்டோரை பிரமிக்க வைத்ததைப் போன்றே இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த வல்லன.
ஸ்ரீபகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்திலிருந்தே ஸ்ரீபகவானது அடியார்களால் செய்யப் பெற்றுவந்த இப்பாடல்களின் பாராயணத்தால் மனமலம் நீங்கப்பெற்று, உள்ளத்தூய்மையும் அமைதியும் பெற்றது பங்கு பெற்றோர் அனைவரின் அனுபவமாய்த் திகழ்ந்தது. இன்று ஸ்ரீரமணாச்ரமத்தில் பாடப்பெறும் இப்பாடல்களின் தொகுப்பே இப்பாராயண நூலாகும்.

Back