தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

உபதேச நூன்மாலை
புதன்கிழமை

ஆன்மவித்தை

பல்லவி


ஐயே! யதிசுலபம் ஆன்மவித்தை
ஐயே! யதிசுலபம்.

பொருள்:
மிகவுமே எளிமையானது, (தன்னை அறியும்) ஆத்ம வித்தை ஐயே! அது மிக எளிமையானது.

அநுபல்லவி

நொய்யார் தமக்குமுளங் கையா மலகக்கனி
பொய்யா யொழியமிகு மெய்யா யுளதான்மா. (ஐயே)

பொருள்:
சாமானிய அறிவுடையவருக்கும், உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியும் பொய்யாகும்படி அதைவிட எளிதாய், கண்கண்ட உண்மையாக உள்ளது ஆன்ம சொரூபம். (எனவே, ஆன்ம வித்தை ஐயே! அதி சுலபம்!)

சரணங்கள்

1.மெய்யாய் நிரந்தரந்தா னையா திருந்திடவும்
பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய்
மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே
மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா
விளங்குமே; இரு ளடங்குமே; இட ரொடுங்குமே;
இன்பம் பொங்குமே. (ஐயே)

பொருள்:
எப்போதும் நிரந்தரமாக உண்மைப் பொருளாகத் தான் இருந்தும்; பொய்யான உடலும், உலகமும் உண்மைபோல் தன்னில் இருந்து முளைத்து எழும். அந்தப் பொய்யான நினைவை ஒடுக்கிட, உண்மைப் பொருள் இதய வெளியில் தானே ஆன்மாவாக ஒளிவீசும். அஞ்ஞான இருள் அடங்கி, துன்பம் நீங்கி இன்பம் பெருகும். (ஐயே! ஆன்ம வித்தை அதி சுலபம்)

2.ஊனா ருடலிதுவே நானா மெனுநினைவே
நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா
னானா ரிடமெதென்றுட் போனா னினைவுகள்போய்
நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம
ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
இன்பத் தானமே. (ஐயே)

பொருள்:
மாமிச வடிவமாகிய இந்த உடலே நான் எனும் எண்ணம், மற்ற பலவித எண்ணங்களாகிய மாலையில் கோர்க்கப்பட்ட நூலைப் போன்றது. ஆகையால் நான் யார்? அது உதிக்கும் இடம் எது? என்று உள்ளே விசாரித்தால் எண்ணங்கள் அழிந்துபோய் நான்-நான் என்று இதயக் குகையில் தானாகத் திகழ்வது, ஆன்ம ஞானமாம் மோனம் ஆகும் என்று அறியலாம். அந்த இடமே ஞானாகாசமும் ஆனந்தத்தின் இருப்பிடமுமாகும். (ஐயே! ஆன்ம வித்தை அதி சுலபம்)

3.தன்னை யறிதலின்றிப் பின்னை யெதறிகிலென்
றன்னை யறிந்திடிற்பின் னென்னை யுளதறிய
பின்ன வுயிர்களில பின்ன விளக்கெனுமத்
தன்னைத் தனிலுணர மின்னுந் தனுளான்ம
ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே;
இன்ப விகாசமே.(ஐயே)

பொருள்:
தனது உண்மைச் சொரூபத்தை விட்டு, மற்றவற்றை அறிவதால் பயன் என்ன? தன் ஆத்ம சொரூபத்தை உணர்ந்துவிட்டால் பிறகு அறிவதற்கு என்ன இருக்கிறது? பலவித உயிரினங்களில் பிரியாது ஒன்றாய் விளங்கும் சொரூபத்தை உணர்ந்தால் அதுவே தன்னுள் விளங்கும் ஆன்ம பிரகாசம் என்பது விளங்கும். அதுவே அருள் விலாசம் ஆகும். அகந்தையை அழிக்கும், இன்பத்தின் மலர்ச்சியுமாகும். (ஐயே! ஆன்ம வித்தை அதி சுலபம்)

4.கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழ
வெம்மார்க் கமதனினு மிம்மார்க் கமிக்கெளிது
சொன்மா னததனுவின் கன்மா திசிறிதின்றிச்
சும்மா வமர்ந்திருக்க வம்மா வகத்திலான்ம
சோதியே; நிதானு பூதியே; இராது பீதியே;
இன்பவம் போதியே. (ஐயே)

பொருள்:
கர்ம வினைகளின் கட்டு அவிழவும், பிறவிக்குக் காரணமாகிய அகந்தை அழியவும், அனைத்து வழிகளைவிட ஆத்ம விசார வழியே மிகவும் சுலபமானது. எண்ணம், சொல், செயலில் அமைதி ஏற்பட்டு சும்மா இருந்தால் ஆச்சரியமான வகையில் ஆன்ம ஜோதி பிரகாசிக்கிறது. அந்த நிலையில் பயமே இல்லை; என்றும் ஆத்மானுபவம் கிடைக்கிறது. அதுவே இன்பக் கடலாய்த் திகழ்கிறது. (ஐயே! ஆன்ம வித்தை அதி சுலபம்)

5.விண்ணா தியவிளக்குங் கண்ணா தியபொறிக்குங்
கண்ணா மனக்கணுக்குங் கண்ணாய் மனவிணுக்கும்
விண்ணா யொருபொருள்வே றெண்ணா திருந்தபடி
யுண்ணா டுளத்தொளிரு மண்ணா மலையெனான்மா
காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
இன்பு தோணுமே. (ஐயே)

பொருள்:
ஆகாசம் முதலான வெளியை விளக்கிக் காட்டும் கண் முதலான பொறிகளுக்கும் கண்ணாகிய, மனமாகிய கண்ணிற்கும் கண்ணாகி அம்மனதிற்கும் மேலான சிதாகாசமாக; வேறு எதையும் எண்ணாது தன்னை உள்ளே நாடும் உள்ளத்தில் ஒளிர்கின்ற அண்ணாமலையைக் காணலாம். அதுவே என் ஆன்மா. அதன் அருளை வேண்டி, அதனிடம் அன்பு பூண்டு இன்பம் தோன்ற அது எப்போதும் விளங்குகிறது. (ஐயே! ஆன்ம வித்தை அதி சுலபம்)

Back