ஸ்ரீ ரமண சந்நிதிமுறை

 

முகவுரை

கணபதி துணை
திருத்தணிகேசன் துணை
இரண்டாம் பதிப்பின்
முகவுரை
ஸ்ரீ ரமண சந்நிதிமுறை என்னும் இப் பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவர் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் ஸ்ரீ ரமண பகவான். திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய,
நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்
என்னுந் திருவாக்குக்கு இலக்கியமாய், சச்சிதானந்தமாய், பரமாத்ம சொரூபமாய், ஈசனாய் விளங்குகின்றார் பகவான்.
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
என மணிவாசகப் பெருமான் தம்மை ஆண்டவரை நினைந்துருகி அந்நாள் எவ்வண்ணம் திருவாசகம் என்னும் தேனை வெளியிட்டருளினரோ அவ்வாறே, இந் நூலாசிரிய ராகிய ஸ்ரீ முருகனார் பகவானது திருக்கண்ணோக்கம் பெற்று அவரருளால் நெஞ்சிற் செஞ்சொல் ஊற்றெழ அவரது அருள், அருமை, பெருமை, எளிமை, உண்மை, இயல், செயல் முதலிய சகல குணங்களையும் அன்பெனும் ஆறு கரையது புரள, ஆர்வமொழிகொடு அவர் திருவடிக்கே அணிந்த புத்தமுதப் பாமாலை ஆகும் இந்நூல். இந் நூலாசிரியர் இராமநாதபுரம் என வழங்கும் முகவையம்பதியில் அந்தணர் குலத்திற் றோன்றித் தமிழ் வல்லுநராய் விளங்கும் தவநிறை செல்வர். இவர் பகவானது பரிபூரண கடாக்ஷம் பெற்ற பக்குவியாகி, அவரது திருவருட் பேற்றின் காரணத்தினாற் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே திளைத்து விளையாடும் உயர் நிலையில் உலகுய்யத் தந்த செழுந்தமிழ்ப் பாசுரங்களாம், இந்நூலின்கண் மிளிரும் பாடல்கள் எல்லாம்.
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
என மணிவாசகப் பெருமானும்,
அறிவுமறி தத்துவமு மபரிமித வித்தைகளும்
அறியென விமைப்பொழுதின் வாழ்வித்த வேதியனும்
என அருணகிரிப் பெருந்தகையும் இறைவன் கருணையை வியந்தெடுத்து ஓதியவாறு, இந் நூலாசிரியரும் பகவான் தமக்கருளிய பேற்றை,
தூங்கி மடிந்த சோம்ப லேனைத் துயினீங்க
வாங்கி நோக்கா லென்னைத் தனது வயமாக்கி
மூங்கை யேனைக் கொண்டு தன்சீர் மொழிவித்த
வேங்க டேசன் விச்சைக் கிணையும் வேறுண்டே
என வியந்தெடுத்தோதி உள்ளங் கரைகின்றனர்.
இந் நூலின் முதற்பதிப்பு 1933-ஆம் வருடம் வெளி வந்தது. அப் பதிப்பு வெளிவந்த பிறகு இயற்றப்பட்ட பல புதிய பதிகங்களும், பழம்பதிகங்களிற் சில புதிய பாசுரங்களும் இப்பதிப்பிற் சேர்க்கப்பட்டுள. திருவாசகத்தைத் தழுவி யமைந்த இந்நூலின் முதற்பதிப்பில் குறையாக இருந்த ரமண புராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, அற்புதப் பத்து, அதிசயப் பத்து, செத்திலாப் பத்து என்னும் பதிகங்கள் ஆறும் இப்பதிப்பிற் புதியனவாகச் சேர்க்கப்பெற்றன; அதனால், திருவாசக உறுப்புக்கள் அனைத்தும் இந்நூலின்கட் காணலாம்படி இப்பதிப்பு அமைந்துள்ளது. பழம் பாசுரங்களிலும் பழம் பதிகங்களிலும் சிலவற்றின் முறைவைப்பு, சில பயன் கருதி மாற்றப் பெற்றிருக்கின்றது.
முன்பதிப்பில் உள்ள வசைதொடு பதிகம் என்பது அருணை வாழ்வு என்றும், சுழியற்பதிகம் என்பது திருச்சுழியற் பதிகம் என்றும், அயலறியாப் பத்து (2) என்பது புறந்தொழாப் பத்து என்றும் இப் பதிப்பில் மாற்றப் பெற்றிருக்கின்றன. முன்பதிப்பில் அயலறியாப் பத்து (2) என்பதன்பின் தனிச் செய்யுட்களாக அமைக்கப்பெற்றிருந்த இரண்டு செய்யுட்கள் அருணவேங்கடம் என்னும் தனித் தலைப்பின் கீழும், முன் சார்புரைத்தல் என்னும் பகுதியிலிருந்த ஈற்றயல் இரண்டு செய்யுட்கள் வேறு புதிய செய்யுட்கள் நான்கனோடு செவிலியிரங்கல் என்னும் தனித் தலைப்பின் கீழும், அப்பகுதியிலிருந்த இறுதிச் செய்யுள் வேறு புதிய செய்யுட்கள் இரண்டனோடு அமுதாநுபவம் என்னும் தனித் தலைப்பின் கீழும் இப் பதிப்பிலே அமைக்கப்பெற்றன. வேறு சில சிறு மாற்றங்களும் அங்கங்கே காணப்படும்.
திருவாசகத்தையே இந் நூல் பெரிதுந் தழுவி அதன்கண் உள்ள பலதுறைப் பதிகங்களையும் பின்பற்றி அமைந்துள்ள தெனினும், சிற்சில வேறுபாடுகளும் இந்நூலகத்துக் காணலாகும். உதாரணமாக, ஆசிரியர் திருச்சதகத்தை அந்தாதித் தொடை யின்றி அமைத்தும், அருட்பத்தை அருட்பத்து அதெந்துப் பத்து என இரு வகையாக விதந்தும், திருவம்மானையை ஒருத்தி இருவர் மூவர் என விரித்தும், திருத்தசாங்கத்தைக் குயிலிடம் வினாவியும், பிரார்த்தனைப் பத்தைப் பிரார்த்தனை அகவல், பிரார்த்தனைப் பத்து, பிரார்த்தனைப் பதிகம் என வெவ்வேறு பாவகையில் வகுத்தும், திருக்கழுக்குன்றப் பதிகத்தின் கருத்தைத் தழுவிக் காட்சிப் பதிகம் எனப் புனைந்தும், திருவாசகத்தில் இல்லாத சொரூபத் திருவகவல், வைராக்கியத் திருவகவல், உபதேசத் திருவகவல், திருக்கண்ணோக்கம், தேசிகப் பதிகம், அடிமைப் பத்து முதலியவற்றைக் கூட்டியும் இச் செந்தமிழ்மாலையைப் பகவான் திருவடிக்குச் சூட்டியுள்ளார். திருவாசகத்தைத் தழுவியதொடு நில்லாது, திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தில் உள்ள அருமைப் பதிகங்களாகிய தோடுடைய, உண்ணாமுலை, கற்றாங்கெரி, காதலாகி, மானினேர்விழி, மாதர் மடப்பிடியும் என்பனவற்றைத் தழுவியும், அப்பர் சுவாமிகள் அருளிய திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் முதலியவற்றைத் தழுவியும், சுந்தரமூர்த்திப் பெருமான் திருவாய் மலர்ந்த மற்றுப் பற்றெனக்கு, பொன்னார் மேனியனே போன்ற அற்புதப் பதிகங்களைப் பின்பற்றியும், அம்மட்டொடு நில்லாது திருவிசைப்பாவில் உயர்கொடியாடை என்பது போன்ற பதிகங்கள் பாடியும், திருப்பல்லாண்டு பாடியும், பின்னும் திருமந்திரம் எனப் பெயரிய தனிப் பதிகம் ஒன்று புனைந்தும், இவற்றுடன் அமையாது பதினோராந் திருமுறையிற் காணப்படும் பெருந்தேவபாணி யென்னத் தேவபாணிப் பதிகங்கள் அமைத்தும், இவ்வாறாகப் பன்னிரண்டாந் திருமுறை நீங்கலாகச் சிவபிரானுக்குரிய பதினொரு திருமுறை யமைப்புக்களும் இந் நூல்வயின் திகழுமாறு புத்தமுதன்ன தமிழ்த் திருமுறையாக இச் சந்நிதிமுறையை உலகுக்கு ஈந்தது இறைவன் பெருங்கருணைத் திறம் என்றே நாம் கூறவேண்டும். மற்றும், திவ்யப் பிரபந்தத்திற் சில பதிகங்களும், பரிபாடற் பகுதியும், அருணகிரியார் அருளிய அநுபூதியும், தாயுமானார் இயற்றிய பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணிகளுங்கூட இந்நூலிற் பின்பற்றப் பெற்றுள. மேற்கூறிய பலவகைப் பதிக வகைகளில் முக்கியமாக எடுத்துக் கூற வேண்டுவது, திருக்கண்ணோக்கம் என வரும் திருப்பதிகம். அருணகிரியார் கடைக்கணியல் வகுப்பு என்று அருளியது ஒருவகை. திருக்கண்ணோக்கம் என வரும் இப்பதிகமோ திருத்தோணோக்கம்போல ஒரு புதுவகையது. சக்ஷுதீக்ஷைக்கு ஆதாரமாக நின்றுதவும் பெருங்கருணையது பகவான் திருக்கண் என்னும் மறைப் பொருளை இப்பதிகம்
ஞானம் பெறலாம் நலம்பெறலா மெந்நாளும்
ஆனந்த வீட்டி லமரலாம் மோனநிலை
கற்றுளோர் தேடுங் கதிரமணர் கண்ணோக்கம்
பெற்றுநா மாடப் பெறின்
என்னும் வகையில் வியந்தெடுத்து ஓதுவது.
இந்நூலின் பிறிதொரு சிறந்த இலக்கணம் இதன்கண் உள்ள சமரசபாவம்; இதனை ஆசிரியர்,
பத்தனே யென்கோ பரமனே யென்கோ
பரிவுடைக் கிறித்துவே யென்கோ
முத்தனே யென்கோ முனைவனே யென்கோ
முகம்மது நபியென மொழிகோ
வித்தனே யென்கோ விமலனே யென்கோ
வீரகோ தமமுனி யென்கோ
அத்தனே யென்கோ குமரனே யென்கோ
வண்ணலே ரமணமா தேவே
என வரும் பாட்டிற் கையிலங்கு பொற்கிண்ணம் போலத் தெளிவுற விளக்கியுள்ளார். தீண்டாமையைத் தீத்தீட்டு என்று கூறி, அஃது அற ஒழிந்து தம் சிந்தை தூய்தாயிட வேண்டும் என்னும் ஆசிரியர் பிரார்த்தனை இக்காலத்தார் உய்த்துணரற்பாலதொரு நுண்பொருள். இங்ஙனம் இத் திப்பிய நூலின் செம்மை எல்லாம் எடுத்துரைப்பின் மிக விரியும்.
இந்நூல் துதிநூ லாதலின், இயன்ற அளவு தேவாரத் தையும் திருவிசைப்பாவையும் ஒட்டிப் பதிகங்களுக்குப் பண்கள் அமைக்கப்பட்டுள. அவ்வப் பண்ணுக்குப் பெரிதும் பொருந்தினதாகப் பெரியோர்களால் தொன்று தொட்டுச் சொல்லப்பட்டு வரும் ராகமும் பக்கலிற் காட்டப்பட்டுளது. ஆங்குக் காட்டிய ராகமேயன்றி நடைக்கும் பொருளுக்கும் ஒத்த வேறு ராகங்கள் அமைத்து இசை வல்லுநர் பாடினும் நன்றேயாம்.
செம்மனக் கிழவோ ரன்புதா வென்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனங் குடிகொண் டிருப்பதற் கியானார்?
என்னுடை யடிமைதான் யாதே?
என உண்மைப் பெரியோர் புலம்பியவாறு பொய்ந்நிறை புலையனாம் எளியேனுக்கு இம் முகவுரை எழுதும் திருப்பணி கிடைத்தது என்னை ஆளும் திருத்தணிகேசன் திருவருளே எனச் சிந்தித்து மகிழ்கின்றேன். நிற்க.
இந் நூலாசிரியருடைய அமுதாநுபவத்திலிருந்து எழுந்த அரிய பெரிய பாக்களைக் கொண்ட இந் நூலை உலகிற் பரப்புதலே தமது பெருந்தொண்டு, பெருந்தவம் என மேற்கொண்டு, அதன் பொருட்டுத் தமிழ்நாடே யன்றித் திரைகடலோடித் தமிழ் வழங்கும் தேயமெல்லாமும் சென்று சென்று பிரசாரம் செய்யும் பேருழைப்புக் கொண்டவரும், பகவான், முருகனார் என்னும் திருநாமங்களை நினைக்குந்தோறும், பேசுந்தோறும், சந்நிதிமுறைப் பாடல்களைப் பாடுந்தோறும், இசைபாட விம்மியழுமாறு வல்லா ரழுந்தை மறையோர் என ஞானசம்பந்தப் பெருமான் கூறிய திருவாக்குக்கு இற்றைய சாக்ஷியாக இலகி, விம்மி அழுது பரவசம் அடையும் பண்பினரும், ரமண வைபவம் என்னும் யாழ்மூரிப் பதிகத்தை ஆசிரியர் இயற்றினதற்குக் காரணபூதரா யிருந்தவரும், ஆசிரியராலேயே அப் பதிகத்தின் நேர் நடுப்பாகத்தில்,
இன்னிசை யாழ்முரிப்பண் ணில யத்தொடி சைக்கெனும்
ரம ணிய பத சுகர் தொழுதெழு கழலர்
என அருமையாகப் பாராட்டப் பெற்றவரும் ஆகிய
ஸ்ரீ ரமணபாதாநந்த சுவாமிகளுடைய பேரன்பு தமிழ்நாடு என்றும் போற்றுந் தகையது என்பதற்கு ஐயமும் உண்டோ?
தமிழ்ப்பேராசிரியரும் தமிழுக்கே தம் வாழ்நாளைச் செலுத்தித் தமிழை வளர்க்கும் பெருந்தகையுமான ஸ்ரீமத் ராவ்சாஹிப் மு. இராகவையங்காரவர்கள் இந் நூலின் முதற் பதிப்பு வெளிவந்த காலத்தும், இவ்விரண்டாம் பதிப்பு நிகழ்ந்த காலத்தும் தம் தமிழ்ப் பணிகளுக்கிடையே இதனையும் ஓருபகாரச் செயலாகக் கொண்டு தம் அரிய குறிப்புக்களை அப்போதைக்கப்போது தெரிவித்து உதவிய அன்புக்கும், தமிழ்க் கடலிலும் முருகன் திருவருட்கடலிலும் திளைத்து விளையாடுபவரும், செஞ்சொலாளரும், கலைமகள் துணையாசிரியரும், தமிழுலகு கண்ணெனப் போற்றும் தாக்ஷிணாத்ய கலாநிதி மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களிடம் பயிலும் பாக்கியம் பெற்றவருமாகிய வித்துவான் ஸ்ரீ கி.வா. ஜகந்நாதையரவர்கள் இவ்விரண்டாம் பதிப்பில் தம்மால் இயன்ற உதவிகளையெல்லாம் ஊக்கத்துடன் செய்து வந்த அன்புக்கும் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
இப்பதிப்பு வெளிவருவதற்கு வேண்டிய பல்வகை உதவிகள் செய்த பிற பெரியோர்களின் அன்பும் என்றும் பாராட்டத் தக்கது.
திங்கள் சூடி திருவருள் எங்கும் என்றும் இலகுக.
திருமுறைகள் பதினொன்றுந் தெரிக்குநல வாய்மையெலாஞ்
செறியு மிந்த
ஒருமுறையி லெனக்காட்டப் பகவனரு ளாலெழுந்த
வுண்மை நூலாய்
அருமுறையி லமைந்தஸ்ரீ ரமணசந் நிதிமுறையை
யறிந்து கற்போர்
கருமுறையி லகப்படார் பேரின்ப நிலைவீட்டிற்
கலப்பர் மாதோ.

நிலமலி யுயிர்கதி நிலைபெற வருள்வது
நலமலி யுரைகளை நலமுற நவில்வது
நலமலி யுரைகளை நவில்வதிஃ தாதலின்
நிலவுக ரமணசந் நிதிமுறை நிலனே.

1-4-1939
சென்னை வ.சு. செங்கல்வராய பிள்ளை


Back